பொதுவாக வயது ஏற ஏறக் குறைவாகத் தான் முதியோர்கள் உணவு உண்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? இது சரியா? வயது அதிகரிக்க அதிகரிக்க நாவில் உள்ள சுவை உணரும் திறன் குறைகின்றது. நாசியில் உள்ள மணம் அறியும் திறன் குறைகின்றது. உடலின் அனைத்து இயக்கங்களும் குறைகின்றது. முதன்மையாக ஜீரண மண்டலத்தின் செயல்பாடுகள் குறைகின்றன. இவை அனைத்திற்கும் மேலாக மனரீதியாக பலப்பல பிரச்சனைகளாக அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. உதாரணமாக தனிமை, மனச்சோர்வு, மனஅழுத்தம், ஓய்வு போன்றவை.
முதியோர்கள் தங்களது ஜீரண சக்திக்கு ஏற்ப குறைவான உணவுகளை எடுத்துக் கொள்வதில் தவறு ஒன்றுமில்லை. முதியோர்களுக்கு என தனியான சிறப்பு உணவு முறை எதுவும் அவசியமில்லை அவர்கள் இது நாள் வரை எடுத்துக் கொண்டு வந்த உணவுகளையே எடுத்துக் கொள்ளலாம், இருப்பினும் சிற்சில சிறிய மாற்றங்களை அவர்கள் கடைபிடித்தார்களானால் அவர்களுக்கு உணவினால் எந்த ஒரு உடல் உபாதையும் ஏற்படாது.
திடீரென உணவு முறையில் முதியவர்கள் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடாது. இது நாள் வரை உட்கொண்ட உணவையும் முறையையும் கடைபிடிப்பது மிகவும் நல்லது இருப்பினும் குறைவாக உணவு உட்கொள்ளும் காரணத்தால் சத்தான உணவுகளை உட்கொள்வது மிக மிக அவசியம்.
குறைவான உணவு அளவுகளில் போதுமான சத்துக்கள் கிடைக்கும் வண்ணம் சில சிறிய கீழ்க்கண்ட மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். உடனடியாக மாற்றங்கள் செய்யக்கூடாது. என்பதனை அனைத்து முதியவர்களும் உணர வேண்டும்.
தானியங்கள்
அரிசி உணவையும் அரிசியால் தயாரிக்கப்பட்ட பிற உணவுகளைக் குறைத்துக் கொண்டு நார்ச்சத்து நிறைந்த பிற தானிய உணவுகளான கோதுமை ராகி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
புரதம்
புரத உணவுகள் முதியோருக்கு இன்றியமையாத உணவுகளாகும். பால், முட்டை, பீன்ஸ், பட்டாணி, பயறுகள், கொட்டைகள், தானியங்கள், மீன், கோழி, இறைச்சி போன்றவற்றை அவரவரது ஜீரண சக்திக்கு ஏற்ப அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்.
கால்ஷியம்
முதியவர்களின் கால்ஷியத் தேவை அதிகமாக இருக்கும். எலும்புகளுக்கும், பற்களுக்கும் தேவையான கால்ஷியம் சத்தை மீன், நண்டு, பால், ராகி, கீரைகள் போன்றவற்றிலிருந்து பெறலாம்.
இரும்பு
முதியோருக்கு புதிய இரத்த செல்களை உற்பத்தி செய்திட இரும்புச்சத்து தேவைப்படும். அதனைப் பெற்றிட அவர்கள், வெல்லம், தேள், கீரைகள், கோதுமை, பேரீச்சம்பழம், ஈரல், போன்றவற்றை உட்கொள்ளலாம்.
வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ்
உடலின் சீரான இயக்கத்திற்கும் இயல்பான செயல்பாட்டிற்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் தேவை இவற்றை முதியவர்கள் காய்கறி, பழங்கள், தானியங்கள், கொட்டைகள், கீரைகள், மீன், பால் மற்றும் பால் பொருட்களிலிருந்து எளிதாகப் பெற்றிடலாம்.
வயது முதிர்ந்தவர்கள் குறைவாக உணவு உண்பது மிக மிக அவசியம். அமெரிக்க நாட்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சயில் எலிகளுக்கு குறைவான உணவு கொடுப்பதால் அவை அதிக நாட்கள் உயிர் வாழ்வது கண்டறியப்பட்டது. எனவே முதியோர்கள் அரை வயிறு உணவு உண்பது மிகவும் நல்லது என உறுதி செய்யப்பட்டது. கலோரி அளவுகள் குறைவாக உள்ள உணவுகளை அரை வயிறும், கால் வயிறும் தண்ணீரும் கால் வயிறு காலியாக வைத்துக் கொள்வதும் வாழ்நானை நீடிப்பதோடு மட்டுமல்லாமல் வேறு எந்த உடல் உபாதைகள் வருவதையும் தடுத்து விடும்.
பலரும் அசைவ உணவுகளை விட்டு விட்டு சைவ உணவிற்கு மாறிவிடுகின்றனர். இதற்கு தனியான ஒரு காரணமே கிடையாது. அவர்கள் அவ்வாறு மாறிக் கொள்வதற்கு கீழ்க்கண்டவைகள் காரணமாக அமையலாம்.
அசைவ உணவை விட எளிதாக சைவ உணவை மென்று சாப்பிடலாம் – பற்கள் வலுவில்லாமல் இருக்கலாம்.
அசைவ உணவை விட எளிதாக சைவ உணவை மென்று சாப்பிடலாம் – பற்கள் வலுவில்லாமல் இருக்கலாம்.
அசைவ உணவுகளை ஜீரணிப்பதற்குத் தேவையான சக்தியை விட சைவ உணவுகளை ஜீரணிக்க குறைவான சக்தி தேவைப்படலாம் – ஜீரண சக்தி குறைவால் மலச்சிக்கல் போன்றவை ஏற்படலாம்.
அசைவ உணவில் அதிகமான கொழுப்புச் சத்து, புரதம் போன்றவற்வையும், காய்கறி, மற்றும் பழங்களில் போதுமான அளவு நார்ச்சத்தும் நுண்ணுட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன.
சைவமோ அசைவமோ எதுவாக இருந்தாலும் அவரவர்கள் பழக்கத்திற்கு ஏற்ப, ஜீரண சக்திக்கு ஏற்ப அனைத்து சத்துக்களும் சமச்சீராக அடங்கிய உணவினை உட்கொண்டு வந்தால் முதியோர் எளிதாக தங்கள் முதுமையை வெல்லலாம்.
நன்றி: மணியம்
அஹா...... நல்ல பதிவு சார் !
பதிலளிநீக்கு