ஒருமுறை நபி (ஸல்) அவர்களுடன் நபித்தோழர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது, "தற்சமயம் இங்கு ஒரு சொர்க்கவாசி வருவார்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே மதீனத்துத் தோழர்களில் ஒருவர் உளுச்செய்த தண்ணீரை தன் தாடியிலிருந்து தட்டிவிட்டவாறு, தன் இடது கையில் தன் காலணிகளைத் தூக்கிக்கொண்டு வந்தார். அடுத்த நாளும், மூன்றாம் நாளும் நபிகளார் இதேப் போன்றே கூற, அதே நபித்தோழர், அதே நிலையில் காட்சி தந்தார். பின்னர் நபிகளார் எழுந்து சென்ற பின்னர் அந்த மனிதரைப் பின்தொடர்ந்து சென்ற இப்னு உமர் (ரலி) அவர்கள், அந்த மனிதரைச் சந்தித்து, "நான் என் தந்தையுடன் தகராறு செய்ததன் காரணமாக மூன்று நாட்கள் அவரிடம் வரமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டேன். எனவே மூன்று நாட்கள் கழியும் வரை உங்களுடன் தங்குவதற்கு வசதி செய்து தந்தால் நல்லது" என்று கூறினார். அந்த தோழரும் சம்மத்தித்து வசதி செய்து கொடுத்தார்.
அந்த மூன்று நாட்களிலும் அந்த மதீனத்துத் தோழர் இரவில் வணங்கியதாகவே இப்னு உமர் (ரலி) அவர்கள் காணவில்லை. அவர் தன் படுக்கையில் சாய்ந்ததும் இறைவனைப் புகழ்ந்தபடி கண்ணயர்ந்து விடுவார். காலைத் தொழுகைக்காகவே அவர் கண்விழிப்பார். ஆனால் நல்ல விஷயங்களை மட்டும் பேச கேட்டார். மூன்று இரவுக்கு பின்னர் அவரது அமல்கள் (வணக்க வழிபாடுகள்) மிகக் குறைவானவையே என்ற முடிவுக்கு இப்னு உமர் (ரலி) வந்தார். பின்னர் அவரை நோக்கி, "தோழரே! எனக்கும் என் தந்தைக்கும் எவ்வித தகராறும் வெறுப்பும் இல்லை. தற்போது உங்கள் மத்தியில் ஒரு சொர்க்கவாசி வருவார் என நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்களாக மூன்று முறை கூறினார்கள். ஒவ்வொரு முறையும் நீங்களே வந்தீர்கள். எனவே உங்களிடம் தங்கி, உங்களின் விசேஷ நடவடிக்கைகள் எவை? என அறிந்துகொண்டு அவற்றைப் பின்வாற்றுவதற்கு ஆவல் கொண்டேன். ஆனால் நீங்கள் பிரமிக்கத் தக்க வகையில் வழிபாடுகள் எதையும் செய்ததாக நான் காணவில்லை. நபிகளாரால் சுபச்செய்தி கூறப்பட்டச் சொர்க்கவாசி உயர் அந்தஸ்த்தை அடைவதற்கு எது காரணமாக நின்றது?" என்று கேட்டார். அதற்கு அந்த நபித்தோழர், "தோழரே! நீங்க்கள் கவனித்தவைகளைத் தவிர வேறு எதுவுமில்லை. நீங்க்கள் கவனித்த வழிபாடுகளை நான் செய்த போதிலும், எந்த மனிதரையும் ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் என் உள்ளத்தில் அறவே இல்லை". எந்த மனிதருக்கும் இறைவன் கொடுத்த அருட்கொடைகளுக்காக நான் அந்த மனிதருக்கெதிராக பொறாமைபடவும் மாட்டேன்" என்றும் கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், "இந்த பிரமிக்கத்தக்க உன்னத பண்புதான் உங்களை அந்த உயரிய பதவியை அடைய காரணமாக இருந்திருக்கிறது" என்று கூறினார். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) - நூல் : அஹ்மத்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக