சிலர் நினைக்கின்றனர் வியர்வை என்பது அழுக்கு உடல் நலத்துக்கு கேடு என்று. ஆனால் உண்மையில் வியர்வை என்பது உடல் நலத்தை பேணுவதற்காகவே. வியர்வை என்ற ஒன்று இல்லையானால் மரணம் நிச்சயம். வியர்வை சுரப்பிகள் மிக முக்கியமாக சிறுநீரகத்தின் வேலைப்பளுவை குறைக்கின்றது.
பொதுவாக மனித உடலில் வியர்க்காத இடம் என்று கேட்டால் அனைவரும் உதடு என்பார்கள். ஆனால் விஞ்ஞானிகளிடம் கேட்டால் அதில் உண்மையில்லை. உடலில் எங்கெல்லாம் சருமம் இருக்கிறதோ அங்கெல்லாம் வியர்வை சுரப்பிகளும் இருக்கின்றன என்று உறுதியாகக் கூறுகின்றனர். வியர்வை சுரப்பிகள் அதிகம் உள்ள இடங்களில் வியர்ப்பது தெரிகிறது. குறைவாக உள்ள இடங்களில் தெரிவதில்லை. அதாவது உடலின் சில இடங்களில் அதிகமான வியர்வை சுரப்பிகள் உள்ளன. உதட்டில் வியர்வை சுரப்பிகள் மிக மிகக் குறைவு. அதனால்தான் உதட்டில் வியர்ப்பது நமக்குத் தெரிவதில்லை. அதிலும் ஒரு சிலருக்கு அதிகமான வியர்வை சுரப்பிகள் உள்ளங்களை பாதங்களில் அமைந்துவிடுவதும் உண்டு. இனி யாரும் வியர்க்காத இடம் உண்டு அது எது தெரியுமா என்று கேட்டால் உடலில் வியர்க்காத இடம் என்று எதுவுமில்லை. உதட்டு மேலயும் வேர்க்கும் என்பது உனக்குத் தெரியுமா? என பதில் கேள்வி கேளுங்கள்.
வியர்வை சுரப்பிகள் பலவிதம். சருமத்தில் நுண்ணிய துவாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு துவாரத்தின் கீழும் ஒரு வியர்வை சுரப்பி இருக்கிறது. இதைத் தவிர அபாக்ரின் செபாஷியஸ் சுரப்பிகளும் உள்ளன. அபாக்ரின் சுரப்பிகள் அக்குள்களிலும் ரோமம் வளரும் பகுதிகளிலும் உள்ளன. இவை ஒரு வித திரவங்களை ரோமங்கள் மூலம் சுரக்கும். இவை காய்ந்ததும் கோந்து போல ரோமங்களில் ஒட்டிக் கொள்ளும். ரோமங்கள் அதிகமாக இருக்கும் அக்குள் பகுதியில் வியர்வை காய்ந்து போவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. எனவே ரோமங்களை அகற்றி சுத்தமாக வைத்திருப்பது உடல் நலத்துக்கு நல்லது. செபாஷியஸ் சுரப்பிகள் உள்ளங்கை கால் தவிர எல்லா இடத்திலும் இருக்கிறது. தலையில் உள்ள வியர்வை சுரப்பிகள் சிபம் எனும் எண்ணெய் திரவத்தை சுரக்கின்றன. இதற்கு தண்ணீரை உள் நுழைய விடாத தன்மை இருக்கிறது. இதனால்தான் தலையில் ஏற்படும் காயத்தை கிருமிகள் அண்டாத வகையில் இந்த சுரப்பிகள் பார்த்துக் கொள்கின்றன.
உடலில் எங்கெல்லாம் சருமம் இருக்கிறதோ அங்கெல்லாம் வியர்வை சுரப்பிகளும் இருந்தே தீரும் என்று உறுதியாக சொல்கின்றனர் விஞ்ஞானிகள். நம் உடலில் வெப்பம் அதிகமானால் அதை கட்டுப்படுத்தி ஒரே சீராக வைத்துக் கொள்ள ஏற்படுவதுதான் வியர்வை. உடலின் வெப்பத்தை 85 சதவீதம் கட்டுப்பாட்டக்குள் வைத்திருப்பது இந்த வியர்வைதான். வியர்வை என்ற ஒன்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மனிதனுக்கு வெப்பம் தாறுமாறாக கட்டுப்பாடு இல்லாமல் அதிகமாகி உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும்.
வியர்வை என்பது பெரும்பாலும் தண்ணீர்தான். அதனுடன் சில ரசாயனங்களையும் கழிவுப் பொருட்களையும் உடல் வெளியே தள்ளுகிறது. இந்த வியர்வை சருமத்தில் 20 லட்சத்தில் இருந்து 50 லட்சம் நுட்பமான துவாரங்கள் மூலம் வழிகிறது. இந்த நுண்ணிய துவாரங்கள் உடல் முழுவதும் பரவியுள்ளன.
நன்றி: சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக