ஆக்கம் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,)
இவ்வுலகம் அழிந்து மக்கள் அனைவரும் இறந்த பிறகு மீண்டும் எழுப்பப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்று நம்புவது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. உலகம் தோன்றியது முதல் உலகம் அழியும் வரை தோன்றிய அனைவரும் திரும்பவும் எழுப்பப்பட்டு ஒன்று திரட்டப்பட்டு விசாரிக்கப்படும் எந்த நாள் மிக மிக கடுமையானதாக இருக்கும். மறுமை என்றதும் நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம் ஏதோ இறைவன் நம்மை விசாரிப்பான் அதன்பின் வரிசைவரிசையாக சொர்க்கத்தில் அல்லது நரகத்தில் சேர்த்துவிடுவான் என உலகத்தில் நடக்கும் காட்சியைப் போன்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படியல்ல. அல்லாஹ் இதைப் பற்றி தன் திருமறையில் 22:1 வசனத்தில் குறிப்பிடுகிறான்: "மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அந்நாளில் அதிர்ச்சி கடுமையானது" என கூறுகிறான். அல்லாஹ்வே அந்நாளில் அதிர்ச்சி மிக கடுமையானது என்று குறிப்பிட்டால்,அந்நாளின் வெப்பத்தைப் பற்றி சற்று நாம் சிந்திக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் அந்நாளின் கடுமையைப்பற்றி குறிப்பிடும் போது, "மறுமை நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு மிக அருகில் கொண்டுவரப்படும். எந்த அளவுக்கென்றால், அவர்களுக்கும் சூரியனுக்கும் இடையில் ஒரு மைல் தொலைதூரமே இருக்கும். அப்போது மக்கள் தம் சயல்களுக்கேற்ப வியர்வையில் மூழ்குவார்கள். சிலரது வியர்வை அவர்களின் கணுக்கால்கள் வரையிலும், சிலரது வியர்வை முழங்கால்கள் வரையிலும், சிலரது வியர்வை இடுப்பு வரையிலும், சிலரது வியர்வை வாய் வரையிலும் எட்டிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: மிக்தாத் பின் அல்ஸ்வத் (ரலி) - முஸ்லிம்). சூரியனைப் பற்றி சில அறிவியல் உண்மைகளைத் தெரிந்துகொண்டால், மறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தின் வெப்பத்தின் கடுமையை புரிந்து கொள்ளலாம்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் 14 கோடியே 94 லட்சத்து 7000 ஆயிரம் கீ. மீ. தூரம். சூரியனின் வெப்பம் பூமியை 8 நிமிஷம் 17 நொடியில் வந்தடைகிறது. சூரியனின் வெளிப்பகுதி வெப்பம் மட்டும் 11 ஆயிரம் டிகிரி செல்சியஸ். சூரியனின் மையப்பகுதி வெப்பம் 400 கோடி டிகிரி செல்சியஸ். நாம் ஏற்கனவே பார்த்த ஹதீஸில் 1 மைல் தூரத்தில் சூரியன் படைப்பினங்களுக்கு மிக அருகில் கொண்டுவரப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 1 மைல் என்பது கிட்டதட்ட ஒன்றரை கீ. மீ. தூரம். சூரியன் 14 கோடியே 94 லட்சத்து 7000 ஆயிரம் கீ. மீ. தூரத்தில் இருக்கும் போதே, நமக்கு அதன் வெப்பத்தை தாங்க முடியவில்லை என்றால், மறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தில் ஒன்றரை கீ. மீ. தூரத்தில் சூரியன் வந்தால், அதனுடைய வெப்பம் எப்படி இருக்கும் என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
இவ்வளவு கடுமையான வெப்பத்தில் அல்லாஹ் ஏழு கூட்டத்தினருக்கு தனது நிழலை வழங்கி அவர்களை அந்த கடுமையான வெப்பத்திலிருந்து காப்பான். அந்த ஏழு கூட்டத்தினர் யார்?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிழலே இல்லாத அந்நாளில் தனது நிழலை ஏழு பேருக்கு அல்லாஹ் வழங்குவான். அவர்கள்:
(1)நீதி தவறாத தலைவன்
(2)அல்லாஹ்வின் வணக்கத்தில் வளர்ந்த வாலிபன்
(3)பள்ளிவாசல்களுடன் தொடர்பு கொண்ட மனிதன்
(4)அல்லாஹ்விற்காக நேசம் கொண்டு, அவனுக்காகவே சேர்ந்து, அவனுக்காகவே பிரிந்த இரு மனிதர்கள்
(5)அழகும், அந்தஸ்தும் உள்ள பெண் (விபச்சாரத்திற்கு) அழைக்கும் போது, நான் அல்லாஹ்விற்குப் பயப்படுகிறேன் என்று கூறும் (கற்புள்ள) மனிதர்.
(6)தனது வலக்கரம் தர்மம் செய்வதை இடக்கரம் அறியாவண்ணம் இரகசியமாக தர்மம் செய்பவன்.
(7)தனிமையில் இறையச்சத்தில் ஈடுபடும் போது அல்லாஹ்வை நினைத்து அழும் மனிதன். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - புகாரி, முஸ்லிம்).
பொதுவாக இந்த ஹதீஸை மேலோட்டமாக பார்த்தால் ஏழு பேர் என கூறப்பட்டுள்ளது. அதனால் ஏழு பேர் மட்டும்தான் அல்லாஹ்வின் நிழல் பெறுவார்கள் என்று புரிந்துகொள்ளக் கூடாது. அந்த ஏழு பேரின் தகுதியில் எத்தனைப் பேர் வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் அன்றும் அல்லாஹ்வின் நிழல் கிடைக்கும்.
(1)நீதி தவறாத தலைவன்: மக்களை ஆளக்கூடிய மன்னர்கள், தலைவர்கள், ஆட்சியாளர்கள் எல்லோரும் நீதியாக ஆட்சி செய்ய வேண்டும். தனக்கு பிடித்தவர்கள் தவறு செய்தால் நியாயம் என்று கூறுவதும், தனக்கு பிடிக்காதவர்கள் நல்லது செய்தால் குற்றம் கண்டுபிடிப்பதும் இன்று நடைபெறுகிறது. நீதியாக ஆட்சி செய்வோம் என்றும் தேர்தலுக்கு முன்பு கூறுவார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தால் அதை மறந்தும் கூட தன் ஆட்சியில் செயல்படுத்த மாட்டார்கள். பணத்தைக் குறிக்கோளாக வைத்துதான் இன்றுள்ள தலைவர்கள் ஆட்சி செய்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் நீதியைக் குறிக்கோளாக வைத்து ஆட்சி செய்தார்கள். அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடுகிறான்: "நீதி செலுத்துங்கள். அது இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சுக்கொள்ளுங்க்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கு அறிந்தவன்" (49:9). இதேப் போன்று (4:135) வசனத்தில் "நீதி வழங்குவதில் மன இச்சையை பின்பற்றாதீர்கள்" என்று கூறுகிறான். ஒரு முறை நபி (ஸல்) அவர்களின் காலத்தில், மக்ஸுமி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள் . அந்த பெண்ணிற்காக பரிந்து பேச உசாமா (ரலி) அவர்கள் போனார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல் விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்?" என்று கூறிவிட்டு, எழுந்து நின்று உரையாற்றினார்கள். “மக்களே! உங்களுக்கு முன்னாள் வாழ்ந்த (பனு இஸ்ராயீல்) மக்கள் வழிகெட்டு போனதற்கு காரணம் (அவர்களிடையே) உயர் குலத்தார் திருடிவிட்டால் அவர்கள் அவரை (தண்டிக்காமல்) விட்டுவிடுவார்கள். அவர்களிடையே பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்களின் மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக (இந்த) முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் முஹம்மத் அவரது கையைத் துண்டித்தே இருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) – புகாரி, முஸ்லிம்).
(2)அல்லாஹ்வின் வணக்கத்தில் வளர்ந்த வாலிபன்: பொதுவாக இளமைப் பருவம் விளயாட்டுக்களில் ஈடுபடக்கூடிய ஒரு பருவமாக இருக்கிறது. ஒரு காரியத்தை அது செய்ய நினைத்தால் அது நல்லதோ கெட்டதோ செய்து முடிக்கும். இந்த துடிப்பை தீமையின் பக்கம் போக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய இளைய சமூதாயம் சமூக சூழலுக்கு அடிமையாகி விட்டார்கள். அல் குர்ஆனை பொருளறிந்து ஓதுதல், தொழுகையை நிலைநாட்டுதல், சுன்னத்தான நோன்பு பிடித்தல், சுன்னத்தான தொழுகையை நிலைநாட்டுதல், ஹராம் ஹலால் பேணி நடத்தல், நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் போன்ற எண்ணற்ற கடமைகளை விட்டுவிட்டு வழிகேடர்களான சினிமா நடிகர் நடிகைகளைப் பின்பற்றுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து விஷயங்கள் பற்றி மறுமையில் விசாரிக்கப்படாத வரை எந்த மனிதனின் பாதாமும் தன் இறைவனிடமிருந்து நகர முடியாது. அந்த ஐந்து விஷயங்களில் ஒன்று வாலிபத்தை எதில் ஈடுபடுத்தினாய் என்று கேட்கப்படும். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வுத் (ரலி) – திர்மிதீ).
(3)பள்ளிவாசல்களுடன் தொடர்பு கொண்ட மனிதன்: பள்ளிவாசல்களுடன் தொடர்பு கொண்ட மனிதன் என்று சொன்னால் எப்போதும் தொழுது கொண்டே இருக்க வேண்டும். திக்ர் செய்துகொண்டே பள்ளியில் இருக்கவேண்டும். உலகத்தொடர்புகளைத் துண்டித்து வாழ வேண்டும் என்று விளங்கி கொள்ளக் கூடாது. இறைவணக்கத்தில் ஈடுபட வேண்டும். அதே நேரத்தில் உலக காரியங்களில் ஈடுபட்டு சம்பாதிக்கவும் வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: காலையில் மாலையில் பள்ளிவாசலுக்குச் செல்பவருக்காக அவர் காலையிலும் மாலையிலும் செல்லும் போதும் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு தங்குமிடத்தை அல்லாஹ் ஏற்பாடு செய்கிறான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - புகாரி, முஸ்லிம்).
(4)அல்லாஹ்விற்காக நேசம் கொண்டு, அவனுக்காகவே சேர்ந்து, அவனுக்காகவே பிரிந்த இரு மனிதர்கள்: நட்பு இஸ்லாமிய சமூக வாழ்வின் மிக முக்கியமானதாக அமைகிறது. நட்பு பாராட்டுவதை வலியுறுத்திய இஸ்லாம் தீய நட்பை துண்டிக்கவும் கட்டளையிடுகிறது. இன்று நட்பு பெரும்பாலும் பணத்திற்காகவும், புகழுக்காகவும் இருக்கிறது. இப்படி இல்லாமல் நட்பு என்பது அல்லாஹ்விற்காக நட்பு கொண்டு, அவனுக்காகவே சேர்ந்து, அவனுக்காகவே பிரிந்த நட்பாக இருக்க வேண்டும். இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூற்நார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் கூறுவான் என்னை கண்ணியப்படுத்துவதற்காக ஒருவரை நேசித்துக்கொண்டவர்கள் எங்கே? எனது நிழல் இல்லாத இன்று அவர்களுக்கு நான் எனது நிழலளிக்கிறேன் என்று கூற்வான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - புகாரி, முஸ்லிம்).
(5)அழகும், அந்தஸ்தும் உள்ள பெண் (விபச்சாரத்திற்கு) அழைக்கும் போது, நான் அல்லாஹ்விற்குப் பயப்படுகிறேன் என்று கூறும் (கற்புள்ள) மனிதர்: ஒரு பெண் தனது அழகு, அந்தஸ்து, செல்வசெழிப்பு காட்டி விபச்சாரத்திற்கு அழைக்கும் போது, அந்த பாவத்திலிருந்து ஒருவனைக் காப்பது இறையச்சம்தான். தன்னை விபச்சாரதிற்கும் அழைத்த பெண்ணின் பிடியிலிருந்து தான் கற்பை காப்பாற்றிக் கொண்ட நபி யூசுஃப் (அலை) அவர்களின் வரலாற்று பேருண்மையை (12:23) வசனத்தில் அழகாக அல்லாஹ் குறிப்பிடுகிறான். இன்றைய உலகில் ஒழுக்கம் அகலபாதாளத்தில் கிடக்கிறது. விபச்சாரம் செய்வதற்கான சூழல் இருந்தும் அதிலிருந்து ஒருவன் விளக்கினால் அது இறையச்சமே காரணம்.
(6)தனது வலக்கரம் தர்மம் செய்வதை இடக்கரம் அறியாவண்ணம் இரகசியமாக தர்மம் செய்பவன்: இன்று தர்மம் என்று சொன்னால் அது விளம்பரத்திற்காகவும், புகழுக்காகவும் செய்யும் ஒரு செயலாக அமைந்துவிட்டது. இதைப் பற்றி அல்லாஹ் தான் திருமறையில் (4:38) வசனத்தில் குறிப்பிடுகிறான்: அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் புகழ்வதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்) என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
(7)தனிமையில் இறையச்சத்தில் ஈடுபடும் போது அல்லாஹ்வை நினைத்து அழும் மனிதன்: அல்லாஹ்வின் கட்டளைகளை மீறி நடப்பவர்கள் ஏராளம். அவர்களில் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பவர்கள் மிகக் குறைவு. அதிலும் யாரும் பாக்காத போது அல்லாஹ்வை அழைத்து அழுது மன்னிப்பு கேட்பவர்கள் குறைவு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுடைய பயத்தின் காரணத்தால் அழுத மனிதன் நரகில் நிழயமாட்டான் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) – திர்மிதீ).
இந்த ஏழு கூட்டத்தினரில் நாமும் ஒருவராக இருக்க அந்த ஓர் இறையோன் துணைபுரியட்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பதிலளிநீக்குசகோதரர் அவர்களுக்கு
அறிவிப்பாளர்: அம்ருபின் அவ்ஃப் (ரலி)
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்
இஸ்லாமிய மார்க்கம் தொடக்கத்தில் மக்களுக்கு அந்நியமானதாக இருந்தது,விரைவில் இது முன்போலவே அந்நியமானதாகிவிடும்;
எனவே அந்நியமானவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!
இவர்கள் எனக்குப் பின்னால் மக்கள் சீர்குலைத்துவிட்ட என் வழிமுறைகளை உயிர்ப்பிப்பதற்காக எழக்கூடியவர்கள் ஆவார்கள்.
(நூல்:மிஷ்காத்)
நபியவர்கள் முன்னறிப்பு செய்த கூட்டத்தில் நீங்களும் உங்களுடைய பங்களிப்பை செய்திருக்கிறீர்கள்
அல்ஹம்துலில்ல்லாஹ்
தொடர்ந்து நேர்வழி செல்ல அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக
சகோதரன்
ஹைதர் அலி
சகோதரர் ஹைதர் அலி அவர்களுக்கு,
பதிலளிநீக்குவலைக்குமுஸ்லாம்,
தங்களின் கருத்துரைக்கு நன்றி!
இன்ஷா அல்லாஹ்! என்னாளான முயற்சியினை செய்கிறேன்.